நடிகை வழக்கில் திலீப், காவ்யா மாதவன் விரைவில் கைது?

செவ்வாய், 4 ஜூலை 2017 (11:03 IST)
கேரள நடிகை  கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
கேரள நடிகை கடந்த பிப்ரவரி மாதம், திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நடிகையிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே, அவரோடு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  
 
மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி விவகாரத்தில் நடிகையை பழிவாங்கவே திலீப் இதை செய்துள்ளார் எனவும் அப்போதே செய்திகள் வெளியானது. ஆனால், அவர் அதை மறுத்தார். அந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பல்சுனி சுனில், நடிகர் திலீப்பிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கு ஒன்றரை கோடி பணம் தரவில்லையெனில் உண்மையை போலீசாரிடம் கூறுவேன் என கூறியிருந்தார். மேலும், பல்சுனிலின் நண்பர் ஒருவர் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாகவும் திலீப் போலீசாரிடம் புகார் அளித்தார்.
 
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. எனவே, சமீபத்தில் திலீப் மற்றும் அவரது மேலாளர் அப்புண்ணி, சினிமா இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவரின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் நடத்தும் ஆடை நிறுவனத்தில் கடந்த 1ம் தேதி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 


 

 
நடிகையை காரில் கடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனில் கடிதத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது. 
 
நடிகையை கடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பல்சுனில் ஒரு குறிப்பிட்ட மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு 4 முறை பேசியுள்ளார். அந்த நபர் திலீப்பின் மேலாளருக்கு நெருக்கமானவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சிறையில் இருந்த படியே திலீப்பின் மேலாளருடன் பல்சர் சுனில் 3 முறை பேசியுள்ளான். அதுமட்டுமில்லாமல், திலீப் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. 
 
எனவே, பல்சர் சுனில் திலீப்பிற்கு மிகவும் நெருக்கமானர் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும், சுனிலுக்கு ஜாமீன் பெற்றுத் தருமாறு 2 பேர் தன்னை வந்து சந்தித்ததாகவும், ‘மேடத்திடம் பேசி விட்டு மீண்டும் வருகிறோம்’ என அவர்கள் கூறி சென்றதாகவும் வழக்கறிஞர் ஒருவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர்கள் கூறிய மேடம் என்பவர் யார் என போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
 
எனவே, திலீப், அவருடைய மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா, காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயார் ஆகியோர் விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட உள்ளனர். 
 
எனவே எந்த நேரத்திலும் திலீப் மற்று காவ்யா மாதவன் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்