ஆம் ஆத்மி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

சனி, 28 மார்ச் 2015 (12:41 IST)
போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
வேளாண்மைத்துறை அதிகாரி எஸ். முத்துகுமாரசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு கடந்த 21 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
 
அப்போது, அவர்கள் திடீரென வீட்டின் வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால், அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்தனர். மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், ஆம் ஆத்மி நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்த அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
மேலும் நீதிமன்றத்தில், அவர்களது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் குறை கூறியுள்ளார். ஆம்ஆத்மி நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு மாநில குழு உறுப்பினர் சந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்