அமீர் கானின் கொடும்பாவி எரிக்கப்பட்டதே சகிப்பின்மைக்கான எடுத்துக்காட்டு - நீதிபதி கருத்து

சனி, 28 நவம்பர் 2015 (13:53 IST)
நடிகர் அமீர் கானின் கொடும்பாவியை எரிப்பதே நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கான சரியான எடுத்துக்காட்டாகும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
 

 
மதுரையில் ‘சகிப்பின்மை மற்றும் கருத்துரிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்ககில் உரையாற்றிய நீதிபதி ஹரிபரந்தாமன் கூறுகையில், ”மதமும் அரசும் வேறுபட்டவை. எனவே ஆட்சியுடன் மதத்தை கலக்கக்கூடாது. சுதந்திரப் போராட்டம் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு உதாரணமாக திகழ்ந்தது.
 
சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியின் தலைமையில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட பல சமயத்தவர்களும் பங்கேற்றனர். காந்திஜி ’ஈஸ்வர அல்லா தேரா நாம்’ என்று எம்மதமும் சம்மதத்திற்கான முழக்கத்தையும் அவர் முன் வைத்தார்.
 

 
ஆனால் இன்று நடப்பதென்ன? அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்ற மதத்தை பயன்படுத்தினர். அதன் விளைவாக கர்நாடக எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்டார். மாட்டிறைச்சி உண்டதற்காக மக்கள் கொல்லப்படுவதை நாம் வெறும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
 
நடிகர் அமீர் கான் பிரச்சனையை பொறுத்தவரை அவர் தனது மனைவியின் கூற்றை தெளிவுபடுத்திய பின்னரும் அவருடைய கொடும்பாவி எரிக்கப்படுகிறது. இதுவே சகிப்பின்மைக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். ஊடகங்களும் அமீர் கானின் அறிக்கையை தவறாக வெளியிடுகின்றன.
 
மாட்டிறைச்சி பிரச்சனையை பொறுத்தவரை 1948 அரசியல் சட்டத்தின் பிரிவு 48 (பசுக்கள், கன்றுகள், பால் தரும் மற்ற கால்நடைகள் ஆகியவற்றை கொல்வதை தடுப்பது) நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டபோது மேட்டுக்குடியினர், ஜமீன்தார்கள் மற்றும் வரிகள் செலுத்துவோரே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
 
ஆனால் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூகத்திலிருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. அந்த சட்டப்பிரிவு மேட்டுக்குடியினரின் கருத்துக்களின் அடிப்படையில் இயற்றப்பட்டது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்