சசிகலாவிற்கு சலுகை ; சொகுசாக வாழ்வதற்கு பெயர் தண்டனையா? - ஆச்சார்யா விளாசல்

புதன், 22 பிப்ரவரி 2017 (11:43 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சிறைத்துறை அதிகாரிகள் சலுகைகள் அளிக்க முன்வந்துள்ளது, சட்டப்படி குற்றம் என கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதை அடுத்து சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. தனக்கு முதல் வகுப்பு சிறை வேண்டும் என சசிகலா தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால், நீதிபதிகள் அவருக்கு எந்த சலுகையும் அளிக்கவில்லை. 
 
இந்நிலையில், அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி. தினகரன்  சமீபத்தில் பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார்.  இதனையடுத்து, சசிகலாவிற்கு சில சலுகைகளை அளிக்க சிறை அதிகாரிகள் முன் வந்துள்ளனர். சசிகலாவும், இளவரசியும் தற்போது ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு தொலைக்காட்சி, கட்டில், மின்விசிறி, செய்தித்தாள் போன்றவற்றை வழங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா “ இதுபோன்ற சலுகைகளை, தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். சிறையில் சொகுசாக வாழ்வது தண்டனை ஆகாது. சசிகலா மற்றும் இளவரசியை சென்னை சிறைக்கு மாற்ற முயற்சிகள் நடப்பதாக அறிந்தேன். அவர்கள் இஷ்டபடியெல்லாம் செயல்பட முடியாது. அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். மேலும், அப்படி அவர்கள் மனு தாக்கல் செய்தால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து கர்நாடக அரசு சார்பாக மனு தாக்கல் செய்வோம்” என ஆச்சார்யா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்