போர்டிங் பாஸ் இல்லாமல் விமானப் பயணம்; பாதுகாப்பு கோளாறு!

திங்கள், 28 ஏப்ரல் 2014 (12:25 IST)
போர்டிங் பாஸ் இல்லாமல் மும்பையிலிருந்து ராஜ்கோட் வரை லிஜூ வர்கீஸ் என்பவர் விமானத்தில் பயனம் செய்துள்ளார். இது, விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விமானம் ஒன்றின்மூலம், லிஜூ வர்கீஸ் என்பவர் மும்பை வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து பிற்பகல்  நாக்பூர் செல்லவிருந்த ஜெட் நிறுவனத்தின் 9W 2165 என்ற விமானத்தில் செல்வதற்கு முன்பதிவு செய்துள்ளார். வர்கீஸ் தனது பாதுகாப்பு சோதனையை முடித்துக்கொண்டு நாக்பூர் விமானத்திற்கான போர்டிங் பாசையும் பெற்றுள்ளார்.
 
ஆனால் ராஜ்கோட் செல்லும் விமானத்திற்கான அறிவிப்பு வெளியானபோது அதை, தான் செல்லவேண்டிய விமானத்திற்கான அறிவிப்பு என்று கருதிய அவர் பயணிகளுடன் இணைந்துகொண்டுள்ளார். ஆனால் குடிபோதையில் இருந்த அவர் தனது கையில் வைத்திருந்த பையை அமர்ந்திருந்த இடத்திலேயே விட்டு சென்றுவிட்டார். அதில் அவரது போர்டிங் பாஸ் இருந்துள்ளது.
 
விமான நிலையத்தில், விமானத்தில் ஏறும்முன்னர், பயணிகளின் எண்ணிக்கை சரிபார்த்தல் என்ற மூன்று நிலைகளின் போதும் அவருக்கு எளிதாக அனுமதி கிடைத்துள்ளது. விமானத்தின் உள்ளே சென்று அவர் அமர்ந்த பின்னரும் மற்றொரு பயணி, வர்கீஸ் தன்னுடைய இருக்கையில் அமர்ந்துள்ளதாக விமான ஊழியரிடம் குறிப்பிட்டபோதும், அவரது போர்டிங் பாசை சரிபார்க்காமல் காலியாக உள்ள ஏதாவதொரு இருக்கையில் அமர்ந்துகொள்ளுமாறு வர்கீசிடம் கூறியுள்ளார்.
 
வர்கீஸ் ராஜ்கோட்டில் இறங்கியபின்னர்தான், தவறான விமானத்தில் பயணித்ததை உணர்ந்துள்ளார். ஜெட் நிறுவனத்தாரைத் தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள் உடனடியாக அவரை மும்பைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக ராஜ்கோட் விமானம் கிளம்பிவிட்டது.
 
இச்சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டைக் குறிப்பதாக உள்ளது. இந்நிகழ்வு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்