மோடிக்கு எதிராக அரை மண்டையுடன் விவசாயி சபதம்!

திங்கள், 28 நவம்பர் 2016 (16:53 IST)
பிரதமர் மோடி பதவி இழக்கும் வரையில் பாதி தலையில் முடிவளர்க்க மாட்டேன் என்று கேரளாவை சேர்ந்த கடைக்காரர் ஒருவர் சபதம் ஏற்றுள்ளார்.


 

கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதோடு, 70க்கும் மேற்பட்ட உயிரழிப்புகள் ஏற்பட்டன.

மேலும், வங்கிகளில் பணம் எடுக்க இயலாமையாலும், ஏ.டி.எம். இயந்தியங்களிலும் போதிய பணம் இல்லாததாலும் பொதுமக்கள் தினசரி செலவீனங்களுக்கே அவதிப்பட்டு வருகின்றனர். மோடியின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் இதில் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 70 வயது முதியவரான யாகியா, ”பிரதமர் மோடிக்கு எதிராக வாக்களித்து அவர் பதவியிழக்கும் வரையில் என்னுடைய தலையின் பாதி பகுதியில் முடியே வளர்க்கப்போது கிடையாது” என்று சபதம் எடுத்து உள்ளார்.

இது குறித்து விவரங்களை கேரளா பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் அஷ்ரப் கடக்கல் என்பவர் தன்னுடைய முகநூல் பகுதியில் வெளியிட்டு உள்ளார். மேலும், முதியவர் ஒருபகுதி தலையை மட்டும் மொட்டையடித்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து யாகிய பேசுகையில், ”எனது பெயர் யாகியா. எனது சக ஊழியர்கள் யாகி என்றும், மற்றவர்கள் யாகிக்காக்கா என்றும் அழைப்பார்கள். எனக்கு 70 வயது ஆகிறது. எனது சொந்த ஊர், கொல்லம் மாவட்டம் கடக்கல் முக்குண்ணம் ஆகும். நான் எனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடம் வசித்து வருகிறேன்.

எனது மகளின் திருமணத்தை நடத்த முடியாது என்று உணர்ந்த நான் என்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். தென்னை மரம் ஏறுவதில் இருந்து, வயல் வேலை செய்வது, வெளிநாடு செல்வது என எல்லாம் செய்துவிட்டேன். ஆனால், வறுமை என்னைவிட்டு செல்லவில்லை. நான் படிக்காதவன்.

பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த போது என்னுடைய கையில் ரூ. 23 ஆயிரம் இருந்தது. அவை அனைத்துமே செல்லாத பணம். நான் அனைத்து பணத்தையும் மாற்றுவதற்கு அருகே இருந்த வங்கிகளுக்கு சென்றேன், இரண்டு நாட்கள் வரிசையில் நின்றேன்.

இரண்டாவது நாள் என்னுடைய இரத்தத்தில் இருந்த சர்க்கரையின் அளவு குறைந்துவிட்டது. நான் நிலைகுலைந்து விட்டேன். சில நல்லவர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற வங்கி கணக்கு தவிர்த்து என்னிடம் வேறு எந்த வங்கி கணக்கும் கிடையாது.

கூட்டுறவு வங்கியில் அனைத்து நடவடிக்கையும் முடங்கிவிட்ட நிலையில், எங்கும் நாம் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது என்று உணர்ந்தேன். என்னுடைய நிலையில் எத்தனை நாட்கள் நான் வரிசையில் நிற்க முடியும். பல ஆண்டுகளாக இரவு, பகல் என கஷ்டப்பட்டு உழைத்த பணம். மருத்துவமனையில் இருந்து நான் வீட்டிற்கு சென்றபோது என்னுடைய கடையில் மொத்த பணத்தையும் எரித்துவிட்டேன்.

உடனடியாக அருகே இருந்த முடிதிருத்தும் கடைக்கு சென்றேன், என்னுடைய தலையில் ஒரு பகுதி முடியை எடுத்துவிட்டேன். கண் இமைக்கும் நேரத்தில் என்னுடைய பலவருட உழைப்பும் எரிந்தது, சாம்பல ஆனது. நாடு பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடி பதவியிழக்கவேண்டும், பிரதமர் மோடி பதவியிழக்கும் வரையில் பாதி தலையில் முடிவளர்க்க மாட்டேன்” என்று கூறி உள்ளார்

மேலும், தான் ஏன் நைட்டி அணிந்துள்ளேன் என்று அவர் கூறுகையில், கடையில் வேலை பார்ப்பதால் அவருக்கு நைட்டி அணிவது மிகவும் வசதியாக உள்ளதாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்