4,000 அரசுப் பள்ளிகளை மூட மகாராஷ்டிர அரசு முடிவு

வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (15:25 IST)
தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் காரணமாக, மகாராஷ்டிராவில் 4 ஆயிரம் அரசுப்பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 64 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 17 ஆயிரம் பள்ளிகளில் மிக்குறைவான மாணவர்களே படிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.  4 ஆயிரம் பள்ளிக் கூடங்களில் தலா 10 க்கும் குறைவான மாணவர்களே படிப்பதாகவும் 13,400 பள்ளிகளில் தலா 10 முதல் 20 மாணவர்கள்வரை மட்டுமே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் 10 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள சுமார் 4 ஆயிரம் பள்ளிகளை நடப்பு ஆண்டிலேயே மூடி விட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் மற்றும் சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாமல் அவற்றை மூடுவது ஏன் என்ற கேள்வியுடன், மகாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு அதிகரித்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்