மோடி தொகுதியில் 315 பேர் கட்டாய மதமாற்றமா?

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (21:43 IST)
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வந்து சென்ற பின்னர், மோடி தொகுதியில் 315 பேர் இந்து மதத்துக்கு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
 

 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாரணாசியில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அசன்பூர் என்ற கிராமம் உள்ளது.
 
இந்த கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் கடந்த வியாழக்கிழமை 38 குடும்பத்தை சேர்ந்த 315 கிறிஸ்தவர்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். அப்போது அவர்களிடம் இருந்த கிறிஸ்தவ புத்தகங்கள் பெறப்பட்டு கீதை புத்தகமும், அனுமான் படமும் வழங்கப்பட்டுள்ளது.
 
315 பேரும் முன்னோர் தாய் மதத்துக்கு திரும்பி இருப்பதாக சாமன்ய சமிதி அறிவித்து உள்ளது. இந்த மதமாற்றத்துக்கு ஏற்பாடு செய்த சந்திராம் பின்ட்டை பாடகான் காவல் நிலைய காவலர்கள் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மதுபன் யாதவ், சிவபச்சன் குப்தா ஆகிய இருவரையும் காவலர்கள் தேடி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்