நாடு முழுவதும் 2500 நகரங்களில் இலவச வைஃபை வசதி

வெள்ளி, 23 ஜனவரி 2015 (16:38 IST)
இணையதள வசதியை மேம்படுத்த நாடு முழுவதும் 2500 சிறு, பெரு நகரங்களில் இலவச வைஃபை வசதியைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இணையதள சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற குறிக்கோளுடன் அனைத்து துறைகளிலும் இணையதள வசதியை மேம்படுத்தி வருகிறது. அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இணையதள பிரச்சாரத்தின் மூலம் வாக்காளர்களை கவர்ந்தது. இணையதள சேவையைப் பெரிதும் விரும்பும் பிரதமர் மோடி, தனது கருத்துக்களை உடனுக்குடன் டிவிட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில், இணையதள சேவையை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 2500 சிறு, பெரு நகரங்களில் இலவச வைஃபை வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் 3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இணையதள சேவையை விரைவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். சென்னை, கொல்கத்தா, லக்னோ, டேராடூன், ஹைதராபாத், வாரணாசி, ஜெய்ப்பூர், போபால், இந்தூர், பாட்னா, சண்டிகர், லுதியானா உள்ளிட்ட நகரங்களில் இலவச வைஃபை சேவை தொடங்கப்பட உள்ளது.
 
இதற்காக அதிநவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளன. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வைஃபை சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், 2015-16 ஆம் நிதியாண்டில் இருந்து செயல்படத் தொடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்