20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்? ஆந்திர உயர்நீதிமன்றம் கேள்வி

வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (16:51 IST)
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்? என்று ஆந்திர ஊயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சம்பவம் நடந்து 17 நாட்களை கடந்தும் இதுவரை ஏன் யாரையும் கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
இந்த வழக்கில் ஆந்திர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிமன்றம் கேட்டபோது, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளதாகவும் இதில் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று அடுத்த கேள்வியை நீதிபதி எழுப்ப, பதில் அளிக்க திணறினார் அரசு வழக்கறிஞர். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறியும், இதுவரை ஏன் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
 
வருகின்ற 28 ஆம் தேதிக்குள் விசாரணை தொடர்பான ஆவணங்களை கண்டிப்பாக தாக்கல் செய்யவேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வரும் திங்கட்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்