நோட்டுகளை மாற்ற சென்ற இருவர் நெரிசலில் சிக்கி சாவு - தொடரும் சோகம்

சனி, 12 நவம்பர் 2016 (12:05 IST)
கேரள மாநிலத்தில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற இருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


 

கேரள மாநிலம் பெரலச்சேரி அருகே உள்ள மாக்ரேரியை சேர்ந்தவர் கே.கே.உன்னி (48). கேரள மாநில மின்வாரிய ஊழியர். இவர் பி.எப். கணக்கில் கடனாக பெற்ற ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிக்குச் சென்றுள்ளார்.

தலச்சேரியில் உள்ள திருவாங்கூர் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக சென்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய உன்னி 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

இதேபோன்று ஆலப்புழா மாவட்டம் குமாரபுரத்தை சேர்ந்த 75 வயது முதியவரான கார்த்திகேயன் என்பவரும் திருவாங்கூர் ஸ்டேட் வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்ற போது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதேபோல்  கடந்த 10ஆம் தேதி உத்தரப்பிரதேச மநிலம், குஷிநகர் மாவட்டம், கோரக்பூரைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான தித்ரஜி (40) என்பவரும் வங்கி வாசலிலே மயங்கி விழுந்து மரணமடைந்தார். புதிய நோட்டுகள் பெறச் செல்லும் இடங்களில் இது தொடர் சம்பவம் நிகழ்வது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்