2ஜி ஸ்பெக்ட்ரம் - சிதம்பரம் பற்றிய குறிப்பு திருத்தப்பட்டதாக பா.ஜ.க புகார்
செவ்வாய், 1 நவம்பர் 2011 (10:14 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விலை நிர்ணயத்தில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு என்று தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய குறிப்பு திருத்தம் செய்யப்பட்டது என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் பா.ஜ.க. புகார் அளித்தது.
அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து பல்வேறு காலகட்டங்களில் நடந்தவற்றை ஆராய்ந்து காலவரிசையாகப் பட்டியலிடப்பட்டது. இந்தக் குறிப்பு பிரதமருக்கு அனுப்பப்பட்டது.
நிதி அமைச்சகம் தயாரித்த குறிப்பு பிரதமருக்கு அனுப்பப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு திருத்தம் செய்யப்பட்டது.
"நிதி அமைச்சரின் ஒப்புதல்'' என்பதற்குப் பதிலாக "நிதி அமைச்சரின் பார்வைக்கு'' என்று திருத்தம் செய்யப்பட்டதாக பா.ஜ.க. புகார் தெரிவித்துள்ளது.
அலைக்கற்றைக்கு விலை நிர்ணயிப்பது குறித்து ப.சிதம்பரத்துக்குத் தெரிந்திருந்தது, எனவே அவருடைய ஒப்புதலுடனே பழைய விலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று இதன்மூலம் தெரிய வந்தது என்று பெரும் பரபரப்பு எழுந்தது. இந்த சர்ச்சைக்குரிய குறிப்பு திருத்தப்பட்டது என்று இப்போது பா.ஜ.க கூறியுள்ளது.