2ஜி வழக்கில் தப்பினார் ப.சிதம்பரம்: சுவாமி மனு நிராகரிப்பு

சனி, 4 பிப்ரவரி 2012 (15:29 IST)
2ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

2ஜி வழக்கை விசாரிக்கும் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை இன்று மதியம் அறிவிப்பதாகக் கூறி தள்ளி வைத்துள்ளளனர்.

அதன்படி மதியம் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,2ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி, சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

இந்த தீர்ப்புதான் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போதைய தீர்ப்பு அவருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் ஒரே குற்றத்தைதான் செய்துள்ளனர் என்று கூறும் சுப்ரமணிய சுவாமி, ராசா குற்றவாளி என்றால், சிதம்பரமும் குற்றவாளிதான் என்று கூறி, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார்.

இதனால் சிதம்பரத்திற்கு ஏற்பட்டிருப்பது தற்காலிக நிம்மதிதானே தவிர, அவரது தலைக்கு மேல் தொடர்ந்து கத்தி தொங்கிக்கொண்டுதான் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்