2ஜி: நீதிமன்றம் தலையிட்டிருக்காவிட்டால் தூங்கியிருப்பீர்கள்: நீதிபதிகள் காட்டம்

திங்கள், 16 மே 2011 (19:36 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் பயன்பெற்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளன என்பதை 2008இலேயே அறிந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் தலையிட்டிருக்காவிட்டால் தூங்கியிருப்பீர்கள் என்று வருமான வரித்துறையை கடுமையாக கண்டித்தனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான புலன் விசாரணையை கண்காணித்துவரு்ம உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, வருமான வரித்துறை தாக்கல் செய்த நடவடிக்கை அறிக்கையை பார்த்த பிறகு இவ்வாறு கடிந்துகொண்டது.

“2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன என்றது உங்கள் துறைக்கு தெரிந்துள்ளது. ஆனால் இது தொடர்பான வழக்கின் மீது கடந்த மார்ச் மாதம் நாங்கள் தலையிட்ட பிறகே நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். நாங்கள் தலையிட்டிருக்காவிட்டால் அவர்கள் (வருமான வரித்துறை) தூங்கியிருப்பார்கள், அதில் எந்த ஐயமும் இல்லை” என்று நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகளை சமரசம் செய்ய முயன்ற அரசு வழக்குரைஞர் விவேக் தன்கா, இதில் பெரும் நிறுவனங்கள் சம்மந்தப்பட்டுள்ளன, அவைகள் பல தடைகளை ஏற்படுத்தின, அதனால்தான் தாமதமானது என்று கூறினார்.
“பெரிய நிறுவனங்கள் என்றால் என்ன பொருள்? உங்கள் மன நிலைதான் என்ன? அடிப்படையில் இவர்கள் வரி ஏய்ப்பாளர்கள், அவர்களை ‘பெரிய’ என்றெல்லாம் அழைக்காதீர்கள், அந்த வார்த்தை கொச்சைபடுத்தாதீர்கள்” என்று நீதிபதிகள் கூறினர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றதும் அந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய பங்குகளை மொரிசியஸ் நாட்டின் வழியாக அயல் நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டன. அவ்வாறு விற்றதில் கிடைத்த மூலதன இலாபத்தின் மீது வரி கட்டுமாறு அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு வழக்குரைஞர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் அவர்களிடமிருந்த வரி வசூல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், இவ்வழக்குத் தொடர்பான புலனாய்வை மத்திய புலனாய்வுக் கழகமும், அமலாக்கத் துறையும், வருமான வரித் துறை ஒன்றிணைந்து செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

இங்கிலாந்தில் இருந்து இயங்கிவரும் வோடாஃபோன் நிறுவனம் ஹட்சிஸ்ஸன் எஸ்ஸார் நிறுவனத்தின் 67 விழுக்காடு பங்குகளை, மொரிசியஸ் வழியாக இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை பயன்படுத்தி வாங்கிக்கொண்டு வரி விலக்குப் பெற்றது. ஆனால் அந்நிறுவனம் அதற்கான வரியை கட்ட வேண்டும் என்றும், முதல் தவணையாக ரூ.2,500 கோடி கட்ட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்