2ஜி தீர்ப்பு நிம்மதி அளிக்கிறது: பிரணாப்

சனி, 4 பிப்ரவரி 2012 (18:38 IST)
2ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நிம்மதி அளிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறிய அவர், யாரோ சிலர் தேவையில்லாமல் குற்றம்சாட்டப்பட்டிருப்பார்கள் என்பதால் இந்த தீர்ப்பு நிம்மதி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் 2ஜி தொடர்பான பிரதான வழக்கிலேயே, நிதியமைச்சகத்தின் அறிவுரை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக பிரணாப் குறிப்பிட்டார்.

இதேப்போன்று மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் கபில் சிபல் குறிப்பிடுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் எங்கள் மீது எதிர்கட்சித் தலைவர்கள் சிலர் தொடர்ந்து குறைகூறி சாடி வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்