2ஜி ஊழல்: 63 பேர் விசாரணையில் உள்ளனர் – ம.பு.க.

செவ்வாய், 1 மார்ச் 2011 (14:51 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக 10 தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்கள் உட்பட 63 பேர் தங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக புலனாய்வு செய்துவரும் தங்கள் அமைப்பு, இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணை தொடர்பான விவர அறிக்கையை இவ்வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட அமர்விடம் மத்திய புலனாய்வுக் கழகத்தின் வழக்குரைஞர் இன்று தாக்கல் செய்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், அது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதனை அவர் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்