2ஜி ஊழல்: ஆ.ராசாவின் செயலாளருக்கு ஜாமீன்

வியாழன், 1 டிசம்பர் 2011 (18:19 IST)
முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராசாவின் செயலாளர் ஆர்.கே சந்தோலியாவுக்கு ஜாமீன் வழங்கியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கனிமொழி எம்.பி., சரத்குமார், கரீம் மொரானி, ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, கவுதம் ஜோஷி, அரிநாயர், சுரேந்திர பிபாரா, சாகித் பல்வா ஆகிய 11 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் ஆ.ராசாவின் தனிச்செயலாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகிய இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் சித்தார்த் பெகுராவுக்கு பதவியை தவறாக பயன்படுத்தியதாக ஜமீன் மறுக்கப்பட்டது. சந்தோலியாவின் ஜாமீன் ஒத்திவைக்கப்பட்டது.

சந்தோலியாவின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதாடும்போது சந்தோலியா எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் அப்போதைய அமைச்சரின் அறிவுறுத்தல்களின் பேரில் தான் செயல்பட்டார் என தெளிவுபடுத்தினார். இதனை தொடர்ந்து சந்தோலியா மீதான ஜாமீன் மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் வாதங்களை ஏற்றுக்கொண்ட டெல்லி நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்