வேலைவாய்ப்பை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது- பாஜக

சனி, 22 ஜூன் 2013 (13:04 IST)
FILE
நாட்டில் ஒரு கோடியே 8 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது, சமீபத்தில் வெளிவந்த தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் (என்.எஸ்.எஸ்.ஓ.) புள்ளிவிவரங்கள் மூலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோல்வியடைந்துள்ளது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 10.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2012 ஜனவரி நிலவரப்படி, நாட்டில் ஒரு கோடியே 8 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர நாட்டில் வேலைகளின் தரமும் குறைந்து வருவது மேற்கண்ட புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது. வளர்ச்சி விகிதம் மந்தமாகி வருவது, ரூபாய் மதிப்பில் சரிவு, ஏற்றுமதி-இறக்குமதியில் வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு, உணவு விலைகள் உயர்ந்தது, ஊழல், நிதிப் பற்றாக்குறை போன்றவற்றுடன் இப்போதைய பொருளாதாரச் சூழ்நிலை இருக்கிறது. இது, பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங்கின் தோல்வியைக் காட்டுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செயல்பாட்டைப் போல் இல்லாமல், முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒவ்வோர் ஆண்டும் உயர் வளர்ச்சி விகிதத்தை ஏற்படுத்தியது. ஆசிய நிதி நெருக்கடி, அணு ஆயுதச் சோதனைக்குப் பிந்தைய தடைகள், நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல், கடும் வறட்சி, கார்கில் போர் போன்ற பல்வேறு உள்நாட்டு மற்றும் உலகளாவிய நெருக்கடிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சந்தித்தது. எனினும், அதன் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்புகள் மிகப்பெருமளவில் உருவாக்கப்பட்டன.

இக்கூட்டணியின் 6 ஆண்டு ஆட்சியில் 6 கோடியே 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 7 ஆண்டுகளில் வெறும் 1 கோடியே 46 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்