லோக்பால் மசோதா அடுத்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும்: மத்திய அரசு

செவ்வாய், 4 அக்டோபர் 2011 (13:35 IST)
அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதவை மத்திய அரசு கொண்டு வரவில்லை என்றால், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தாம் பிரச்சாரம் செய்யப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

ஹசாரேவின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்தே, குர்ஷித் இன்று டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டி, அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இருப்பினும் ஹசாரேவின் எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அவர்,"அது அவர்களது முடிவு;நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் யாருக்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக ஓட்டளிக்கும் உரிமை உள்ளது.

காங்கிரஸ் தனது வேலை மற்றும் கடமையை மட்டுமே செய்யும்.கடமையை நிறைவேற்றும்போது மீண்டும் மக்களிடம் செல்லும்.அதன் பின்னர் மக்கள் தீர்ப்பளிக்கட்டும்" என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்