லாரி வேலை நிறுத்தம்-அரசு முயற்சி!

புதன், 2 ஜூலை 2008 (18:47 IST)
லாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தத்தால் மேலும் விலை உயர்வதுடன், பொருட்களின் பற்றாக்குறையும் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு லாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

லாரி உரிமையாளர்கள் சேவை வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இது குறித்து மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய உறுப்பினர் (பட்ஜெட் & சேவை வரி) வி. ஸ்ரீதரன் கூறுகையில், தற்போது சேவை வரி விதிப்பதில் விதி முறைகளை கடைப்பிடிப்பதிலும், இதை அமல்படுத்துவதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன.

இது சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் கையாளும் தனிப்பட்ட பொருட்கள் மீது சேவை வரியை எப்படி விதிப்பது என்பது பிரச்சனையாக உள்ளது.

சென்ற மாதம் வாடகைக்கு எடுக்கும் லாரிகளுக்கு செலுத்தும் கட்டணம் மீதான சேவை வரியை அரசு ஆணை வெளியிட்டு ரத்து செய்தது.

லாரி உரிமையாளர்கள் மேலும் சேவை வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இவர்கள் தற்போதைய அளவில் இருந்து, 75 விழுக்காடு லாரி நிறுவனங்களுக்கு சேவை வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையுள்ளது என்று ஸ்ரீதரன் கூறினார்.

இந்த பிரச்சனையில் முடிவுகாண மத்திய நிதி அமைச்சகம், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தும் என்றார்.

இந்த பேச்சுவார்த்தை பற்றிய விபரத்தை கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

லாரிகளின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசிக்க மத்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகள் இடையிலான கூட்டமும் நடந்தது.

மத்திய அமைச்சரக செயலாளர், சாலை போக்குவரத்து அமைச்சகம், நிதி அமைச்சக செயலாளர் இடையே கூட்டம் நடைபெற்றது.

இதில் லாரி உரிமையாளர்கள் அரசிடம் சமர்ப்பித்துள்ள டோல்கேட் கட்டணம், டீசல் விலை, வேக கட்டுப்பாடு கருவி பொருத்துதல் போன்ற விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்