லாரிகள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

திங்கள், 12 ஜனவரி 2009 (18:49 IST)
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தம் இன்று மாலை முடிவுக்கு வந்தது. இதையடுத்து சரக்கு போக்குவரத்து ஓரிரு நாட்களில் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தத்தால், நாடு முழுவதும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

லாரிகள் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வந்தன. குறிப்பாக காய்ய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், அரசுப் பிரதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசின் முன் வைத்த, கைது செய்யப்பட்டுள்ள தங்களது பிரதிநிதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுவது என்று முடிவானது.

வேலை நிறுத்தம் விலக்கிக் கொண்டதாக அறிவிப்பை மோட்டார் காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று மாலை புதுடெல்லியில் வெளியிட்டனர்.

டீசல் விலையைக் குறைக்க வேண்டும், நாடு முழுவதும் ஒரே தேசிய பெர்மிட் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

தொடர்ந்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். என்றாலும் லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை.

இதற்கிடையே மத்திய கப்பல் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு, லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து லாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தின் சேலம், ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் தேங்கிக்கிடக்கும் சரக்குகள் அடுத்த சில தினங்களில் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காய்கறிகள் விலையும் விரைவில் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்