லஞ்சம் வாங்கியதை பிடித்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தாக்கிய போலீசார்!

வெள்ளி, 3 செப்டம்பர் 2010 (13:57 IST)
உத்தரபிரதேசம் பெரேலி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்துக் காவலர்களை கையும் களவுமாக பிடித்த பெண் ஐபிஎஸ் காவல்துறை அதிகாரியை தாக்கி, ரோட்டில் தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநில காவல்துறையில் போக்குவரத்து பிரிவு எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் கல்பனா சக்ஸேனா.

இவரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இராணுவ வீரர் ஒருவர், பரேலி மாவட்டத்தில் உள்ள ஜாட் ரெகிமென்டல் என்ற இடத்தில் உள்ள சாலை வழியாக செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி, போக்குவரத்துக் காவலர்கள் சிலர் பலவந்தமாக பணம் பிடுங்குவதாக புகார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கார் ஒன்றில் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார் கல்பனா.அவர் அங்கு சென்றபோது போக்குவரத்துக் காவலர்கள், வாகன ஓட்டிகளிடமிருந்து லஞ்சம் வாங்குவதை நேரிலேயே பார்த்தார்.

அவர் தங்களை நோக்கி நெருங்கி வருவதை பார்த்த போக்குவரத்து காவலர்கள், கல்பனா யார் என்பதை அடையாளம் தெரிந்துகொண்டு அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது டிரைவர் இருக்கையில் இருந்த காவலர் ஒருவரது சட்டைக்காலரை கல்பனா எட்டி பிடித்துக்கொண்டார்.

ஆனாலும் காரை நிறுத்தாத அந்த காவலர்கள், அவரை சரமாரியாக தாக்கி காரை தொடர்ந்து வேகமாக செலுத்தினர்.

இதனால் கல்பனா, சாலையில் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டார்.பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கல்பனாவை அவ்வாறு இழுத்துச் சென்ற அந்த காவலர்கள், பின்னர் அவரை சாலையில் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

கை மற்றும் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கல்பனா சிகிச்சை பெற்று வருகிற நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 3 காவலர்களில் ஒருவர் பிடிபட்டுள்ளார். மற்ற இரண்டு பேர்களையும் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்