ருச்சிகா வழக்கு: ரத்தோர் பதக்கம் பறிப்பு

திங்கள், 4 ஜனவரி 2010 (16:31 IST)
ஹரியானா மாநில டென்னிஸ் வீராங்கனை ருச்சிகாவை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அவரது தற்கொலைக்குக் காரணமான முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ரத்தோரின் காவல்துறை பதக்கங்களை பறித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, இன்று காலை அவரது பதக்கங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தார்.

ருச்சிகாவை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றச்சாற்றில் சிக்கியுள்ள ரத்தோரின் செயலால் ஹரியானா மாநிலத்திற்கும், காவல்துறையினருக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஹூடா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஹூடாவின் பரிந்துரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைத்த சிறிது நேரத்தில் பதக்கம் வழங்கும் குழுவின் கூட்டம் கூடி இப் பிரச்சினை குறித்து விவாதித்தது.

இதையடுத்து ரத்தோரின் பதக்கங்களை பறிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

விரைவில் ரத்தோரின் காவல்துறை பதக்கங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்