ராக்கிங்கை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: மாநில ஆளுனர்களுக்கு குடியரசுத் தலைவர் கடிதம்!

ஞாயிறு, 3 மே 2009 (14:06 IST)
புதுடெல்லி : ராக்கிங் கொடுமையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அனைத்து மாநில ஆளுனர்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கடிதம் எழுத உள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த அமன் காச்ரு என்ற மாணவர், ராக்கிங் கொடுமைக்கு பலியானார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று, கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் நடந்த சில ராக்கிங் கொடுமைகளும் வெளிச்சத்துக்கு வந்தன.

இந்நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் ராக்கிங் கொடுமைக்கு பலியான அமன்காச்ருவின் தந்தை ராஜேந்திரா காச்ரு, ராக்கிங் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'அமன் இயக்கம்' என்ற ஓர் அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று, மாணவ, மாணவர்கள் மத்தியில் ராக்கிங் கொடுமைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து பேசினார். அப்போது, ராக்கிங் கொடுமைகளுக்கு எதிராக, நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களிலும் தான் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கு உடனடியாக அனுமதி வழங்கிய பிரதிபா பாட்டீல், இது தொடர்பாக அனைத்து மாநில ஆளுனர்களுக்கும் விரைவில் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளார்.

மாநிலத்தின் ஆளுனர்களாக இருப்பவர்களே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களாகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ராக்கிங் கொடுமைகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில், புதிய சட்டம் ஒன்றை கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்