ரத்தோருக்கு ஜனவரி 7ஆம் தேதி வரை இடைக்கால பிணை

வெள்ளி, 1 ஜனவரி 2010 (14:40 IST)
டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரத்தில் 6 மாத சிறை தண்டனை பெற்ற முன்னாள் டி.ஜி.பி. ரத்தோர் மீது புதிதாகத் தொடரப்பட்ட 2 வழக்குகளில் அவருக்கு ஜனவரி 7ஆம் தேதி வரை இடைக்காலப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தனது தங்கை ருச்சிகாவை மானபங்கம் செய்தது மட்டுமின்றி, காவல் அதிகாரி ரத்தோர் தன்னை சித்ரவதைக்கு உள்ளாக்கியதே அவள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் என்று கூறி ருச்சிகாவின் சகோதரர் அஷூ கிர்ஹோத்ரா காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

1990இல் பள்ளி மாணவியாகவும், டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாகவும் திகழ்ந்த ருச்சிகாவை, அப்போது ஹிரியானா மாநில காவல் தலைமை ஆய்வாளராக இருந்த எஸ்.பி.எஸ். ரத்தோர் மானபங்கம் செய்தது நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு - 19 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மானபங்கப்படுத்தப்பட்ட ருச்சிகா கடந்த 1993ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தள்ளியது, அவளுடைய சகோதரனான தன்னை ரத்தோர் சித்ரவதை செய்ததுதான் என்று அஷு கிர்ஹோத்ரா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவருடைய புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க சண்டிகார் செசன்ஸ் நீதிமன்றத்தில் பிணை கோரி ரத்தோர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அதில் ஜனவரி 7ஆம் தேதி வரை ரத்தோருக்கு இடைக்கால பிணை வழங்கி நீதிபதி எஸ்.பி.சிங் உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்