மேலும் ஒரு கடற்படை கப்பல் விபத்து; விஷவாயு கசிந்து அதிகாரி பலி

சனி, 8 மார்ச் 2014 (12:08 IST)
மேலும் ஒரு கடற்படை கப்பல் விபத்தில், விஷவாயு கசிந்து அதிகாரி ஒருவர் பலியானார். பாதிக்கப்பட்ட 2 பேர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
FILE

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது. மும்பையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சிந்துரத்னா’ என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் திடீர் தீ விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி கடற்படை அதிகாரிகள் 2 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி பதவி விலகினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மும்பை மஜ்காவ் துறைமுகத்தில் கப்பல்கட்டும் தளத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ என்ற கப்பலின் எந்திர பகுதியில் நேற்று கார்பன்-டை-ஆக்ஸைடு பிரிவு திடீரென செயல் இழந்தது. மேலும், வாயு (கியாஸ்) கசிந்து விஷவாயு பரவியது.

கப்பலில் தீயணைப்பு பணி பரிசோதனை நடைபெற்றபோது எதிர்பாராதவிதமாக கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் திறந்து கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் கப்பலில் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே, வாயு கசிவின் தாக்கத்தால் கப்பலில் பணியில் இருந்த கடற்படை அதிகாரி (கமாண்டர்) ஒருவர் உயிரிழந்தார். அவர் பெயர், குண்டல் வத்வா (வயது 42).

மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த அவர், சிகிச்சைக்காக செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர், மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 7 மாதங்களில் 12 கப்பல் விபத்துகள் நடைபெற்று உள்ளன. அதில் மிக பெரிய விபத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ‘ஐ.என்.எஸ். சிந்துரக்ஷாக்’ என்ற போர்க்கப்பல் கடலில் மூழ்கியதாகும். இந்த விபத்தில் 18 வீரர்கள் பலியானார்கள்.

மேலும், கடந்த மாதம் தொடக்கத்தில் ‘ஐ.என்.எஸ். ஐராவத்’ என்ற போர்க்கப்பல் தரைதட்டியதும் இந்த விவகாரத்தில் அதிகாரி ஒருவரின் பதவி பறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்