மும்பை தாக்குதல்: 2 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு

திங்கள், 3 மே 2010 (17:12 IST)
மும்பை தாக்குதல் வழக்கில் சதி குற்றம் சாற்றப்பட்ட இந்தியர்கள் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பளித்த மும்பை விரைவு நீதிமன்றம், அஜ்மல் கஸாப்பை குற்றவாளி என அறிவித்தது.

அதே சமயம் மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய குற்றச்சாற்றின் பேரில் கைது செய்யப்பட்ட இந்தியர்களான ஃபக்கீம் அன்சாரி மற்றும் ஷகாபுதீன் அன்சாரி ஆகியோர் மீதான குற்றச்சாற்றுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதி அவர்களை விடுவித்தார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசு தரப்பில் இவ்வழக்கில் ஆஜராகி வாதாடிய சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கஸாப் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த உஜ்வால், அதே சமயம் மற்ற இரண்டு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றார்.

அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு அரசுக்கு தாம் பரிந்துரை செய்யப்போவதாக உஜ்வால் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்