மும்பை குண்டு வெடிப்பு : 4 காவலர்களுக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு உதவிய 4 காவலர்களுக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மராட்டிய காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் அசோக் முலேஷ்வர், பி.எம். மஹாதிக், ரமேஷ் மாலி, எஸ்.ஒய். பாஷில்கர் ஆகியோர் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை மும்பைக்கு கொண்டுவர பயங்கரவாதிகளுக்கு உதவியது நிரூபணமானது. அதன் அடிப்படையில் காவல்துறை சட்டத்தின் கீழும், சுங்க சட்டத்தின் படியும் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்ட இவர்கள் நால்வருக்கும் தலா 6 ஆண்டுக்காலம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபாரதமும் விதித்து நீதிபதி பிரமோத் கோடே இன்று தீர்ப்பளித்தார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இவ்வழக்கில் 100 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் தண்டனையை அறிவிக்கத் துவங்கிய நீதிபதி பி.டி. கோடே, ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்களை கடத்துவதற்கு உதவிய 5 பேருக்கு தண்டனை விதித்தார். இன்று 4 காவலர்களுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்