மும்பை கற்பழிப்பு: நடந்தது என்ன? பெண் நிருபருடன் சென்றவர் பரபரப்பு வாக்குமூலம்!

புதன், 28 ஆகஸ்ட் 2013 (19:08 IST)
FILE
நாட்டை உலுக்கி வரும் மும்பை பெண் புகைப்பட நிருபர் கும்பலாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் சம்பவத்தன்று நிருபருடன் இருந்த நபர் நடந்ததை முழுதும் விவரித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்றைய தினம் பெண் புகைப்பட நிருபரையும் அவருடன் சென்ற மற்றொருவரையும் கற்பழித்த 5 பேரும் மிரட்டி, பயமுறுத்தி சக்தி மில்ஸின் உள்ளே அழைத்து சென்றுள்ளனர்.

இது குறித்து அவர் விவரித்தது வருமாறு:

"ஆகஸ்ட் 22ஆம் தேதி நான் எங்கள் அலுவலகத்திற்கு மதியம் 1 மணிக்கு திரும்பினேன். வேலையை முடித்த பிறகு நானும் எனது சக பணியாளருமான பெண் புகைப்பட நிருபரும் மகாலஷ்மி ரெயில் நிலையம் அருகே வந்து சக்தி மில்ஸை சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று தீர்மானித்தோம்.

ரெயில்வே இருப்புப் பாதை அருகேயிருந்த உடைந்த சுவர் வழியாக மாலை 5.30 மணியளவில் நாங்கள் இருவரும் உள்ளே போக முயன்றோம். ஆனால் அப்பகுதியில் நுழைய முடியவில்லை. அப்போது எப்படி நுழைவது என்று பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது உள்ளேயிருந்து 2 நபர்கள் வந்தனர். அவர்கள் இது வழியல்ல நல்ல பாதையே இருக்கிறது அப்படி செல்லுங்கள் என்றனர்.

நாங்கள் பிறகு சக்தி மில்ஸ் காம்பவுண்டிற்குள் நுழைந்து புகைப்படங்களை எடுத்தோம். அங்கிருந்து ரெகுலர் ரோடும் கண்ணிற்குத் தெரிந்தது. போட்டோக்கள் எடுத்த பிறகு அந்த வழியாக சென்று விடலாம் என்று நினைத்திருந்தோம்.

மணி ஆறெகால் இருக்கும்போது எங்களுக்கு வழி கூறிய அதே 2 நபர்கள் மீண்டும் எங்கள் அருகில் வந்தனர். அவர்களுடன் உடற்பருமனாக ஒருவன் வந்தான். நாங்கள் போட்டோ எடுப்பதை மில் பாஸ் பார்த்து விட்டதாகவும் அவரை நாங்கள் பார்க்கவேண்டும் என்றும் கூறினான். பெண் நிருபர் அவனிடம் பேச வேண்டும் என்றார். ஆனால் அவன் கேட்கவில்லை பேசாமல் என் பின்னால் வாருங்கள் என்று மிரட்டினான்.

நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பெண் எங்கள் புகைப்படத் துறையின் தலைவரை செல்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் நம்பர் மிகவும் பிசியாக இருந்தது.

அப்போது நாம் மெயின் நுழைவாயில் வழியாக செல்லலாம் என்றேன், ஆனால் அந்த குண்டு மனிதன் மறுத்து விட்டான். நடந்துகொண்டிருக்கும்போது எங்கள் பாஸிடமிருந்து அவருக்கு போன் வந்தது. அப்போது ரெயில்வே ஊழியர்களுடன் சென்று கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த குண்டு ஆசாமி 2 நாட்களுக்கு முன்பு மில்லில் ஒரு கொலை நடந்திருப்பதாகவும் அதனைச் செய்தது நாந்தான் என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டான், அவனுடன் இருந்த 2 பேரும் நாந்தான் கொலைகாரன் என்றார்கள். எங்களை விட்டு விடுங்கள் என்று நான் கூறினேன், அந்த குண்டு மனிதன் தன் பெல்ட்டைக் கழற்றி என்னை அடி அடி என்று அடித்து என் கையை பின்பக்கமாக பெல்ட்டால் கட்டிப்போட்டான்.

என்னை அடித்ததைப் பார்த்ததும் பெண் நிருபர் எங்களது கேமரா, மொபைல் போன்களை கொடுத்து விடுகிறோம் என்றார். பிறகு என் பேண்டிலிருந்தும் பெண்ணின் பேண்டிலிருந்தும் பெல்ட்டை உறுவினர்.

அதன் பிறகு 3 பேர் என் அருகில் இருக்க, அந்த குண்டு நபரும் இன்னொருவரும் பெண் சக ஊழியரை பாழடைந்த ஒரு அறைக்கு கூட்டிச் சென்றனர்.

5 - 10 நிமிடங்கள் கழித்து மீசை வைத்த மனிதன் வெளியே வந்தான். என் அருகில் நின்றிருந்த மூவரில் ஒருவர் அந்த அறைக்குச் சென்றான்.

பிறகு அந்த குண்டு மனிதனும் இன்னொருவனும் வெளியே வர மற்ற 2 நபர்கள் அந்த அறைக்குள் சென்றனர். அதில் ஒருவன் நீல கலர் ஜீன்ஸ் அணிந்திருந்தான்.

பிறகு எனது பெண் நிருபர் அறையிலிருந்து வெளியே வந்தார். அவர் மிகவும் பயந்து போயிருந்தார். என் கையைப் பிடித்துக்கொண்டார்.

நான் என்ன நடந்தது என்றேன், இந்த 5 பேரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கற்பழித்து விட்டதாக கூறினார் மேலும் ரத்தப்போக்கும், கடும் வலியும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அந்த 5 பேரும் எங்கள் இருவரையும் மீண்டும் ரெயில் நிலையம் அருகே கொண்டுவிடும்போது மணி 7.15 இருக்கும். பிறகு இரண்டு லோக்கல் டிரெயின்கள் சென்று முடிந்ததும் எங்கள் இருவரையும் திரும்பி பார்க்காமல் செல்லவும் என்று 5 பேரும் மிரட்டி அனுப்பினர்.

பெண் நிருபர் உடனே அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்குமாறு கூறினார். நான் நடந்த சம்பவத்தை எங்கள் பாஸிடம் தெரிவித்தேன்.

பிறகுதான் போலீஸ் வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்