மும்பையில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூடப்பட்டன

புதன், 12 ஆகஸ்ட் 2009 (13:45 IST)
மும்பை: பன்றிக்காய்ச்சல் நோயினால் மகராஷ்டிர மாநிலம் புனே நகரம் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், தலைநகர் மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சினிமா திரையரங்குகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஒரு வார காலம் மூடப்படும் என்றும், தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் எனப்படும் பன்னடுக்கு வளாகங்கள் ஆகியவை 3 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்திக் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டிருப்பதாக அவர் கூறினார்.

நாட்டில் இந்நோய்க்கு 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் புனேயில் மட்டும் 8 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்