முதல்வராக பதவியேற்ற கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே வாழ்த்து கடிதம்

சனி, 28 டிசம்பர் 2013 (18:13 IST)
FILE
முதலமைச்சராக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே, கிரண்பேடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி மாநில முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். விழாவில் அவரது குருவான அன்னா ஹசாரே கலந்து கொள்ளவில்லை.

அவர்தான் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வித்திட்டவர். அன்னா ஹசாரே போராட்டத்தில் பங்கெடுத்து அவருக்கு ஆலோசகராக பக்க பலமாக இருந்து செயல்பட்டவர்தான் கெஜ்ரிவால்.

அதன்பிறகு கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்தபோது அதற்கு அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் கெஜ்ரிவால் கூறுகையில்,

‘‘நாம் உருவாக்கிய ஊழல் எதிர்ப்பு எழுச்சியால் மற்றவர்கள், ஆதாயம் அடைந்து விடக்கூடாது’’ என்று கூறி அரசியல் கட்சி தொடங்கினார்.

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியதுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் கனவையும் தகர்த்தார்.

தான் பதவி ஏற்கும் விழாவில் அன்னா ஹசாரே கலந்து கொள்ள வேண்டும் என்று இருமுறை அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் உடல் நிலை சரியில்லாததால் வர இயலவில்லை என்று தெரிவித்துவிட்டார். என்றாலும் இன்று பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் நீங்கள் நல்ல முறையில் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதே போல் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடியும் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவுக்கு செல்லவில்லை.

கிரண்பெடி தனது டுவிட்டரில், ‘‘சில வருடங்களுக்கு முன் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு எதிராக சுனாமி போல் எழுந்தனர். தற்போது அவர்களுக்கு தீர்வு எனும் வெளிச்சம் தோன்றியுள்ளது. மாற்றத்தை கற்றுக் கொள்ளும் நேரம் இது என்று கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்