மாவோயிஸ்ட்- வடகிழக்கு தீவிரவாதிகள் கூட்டு-ப.சிதம்பரம்

திங்கள், 14 செப்டம்பர் 2009 (12:10 IST)
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பிரிவினை கோரி போராடி வரும் தீவிரவாதிகளுடன், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ப. சிதம்பரம் குற்றம்சாற்றியிருக்கிறார்.

இதன்மூலம் தங்களின் தாக்குதலை அதிகரிக்க மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், அண்மைக்காலங்களில் அவர்களின் தாக்குதல் அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாநில காவல்துறை தலைமை இயக்குனர்கள் (டி.ஜி.பி), உயர் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டை புதுடெல்லியில் இன்று தொடங்கி வைத்துப் பேசுகையில் ப. சிதம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.

நவீன ஆயுதங்களுடன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் கவலையளிக்கக்கூடியது என்றும் அவர் கூறினார்.

காவல்துறையினரை குறைவைப்பதோடு மட்டுமல்லாமல், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்போரையும் கண்டறிந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புத் துறையைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக அவர் கூறினார்.

நவீன காவல்துறை சட்டம், நகரப் பகுதிகளில் மெகா கண்காணிப்பு, கைரேகை அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்துதல், சிறை சீர்திருத்தம் போன்றவற்றுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ப. சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்