மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்தப்படாது'

திங்கள், 2 நவம்பர் 2009 (17:36 IST)
PTI Photo
FILE
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தினரை அங்கு பணியமர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி கூறியிருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ராணுவத்தினரின் பங்கு வேறுவிதமானது என்றும், உள்நாட்டு பாதுகாப்பிற்காக இறுதிக்கட்ட ஆயுதமாகவே ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்களில் ராணுவத்தினரை ஈடுபடுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்றும் கூறினார்.

மாவோயிஸ்டுகளால் விளைவிக்கப்படும் வன்முறையை உறுதியுடன் அரசு எதிர்கொள்ளும் என்று கூறிய அவர், மாவோயிஸ்டுகள் மட்டுமல்லாது யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றார்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்பது மாநில அரசின் விவகாரம் என்றும், எனவே மாநில அரசுகள்தான் நடவடிக்கை என்றும் குறிப்பிட்ட அவர், உள்நாட்டுப் பாதுகாப்பை நிலைநிறுத்த துணை ராணுவப்படையினரை அனுப்புவது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயார் என்றார்.

மேற்குவங்கம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவர்களின் நடவடிக்கைகளை ஒடுக்குவது அரசுக்கு மிகப்பெரிய சவால் என்றார்.

பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றாலும், அந்நாட்டில் இருந்து செயல்படும் ஏராளமான பயங்கரவாத முகாம்கள் அந்நாட்டுடனான நல்லுறவுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது என்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்காதவரை உறவுகளை மேம்படுத்துவது கடினம் என்றார் அவர்.

அண்டை நாட்டுடன் சுமூகமாற உறவுகளை கடைபிடிக்கவே இந்தியா விரும்புவதாகவும், சண்டையிட விரும்பவில்லை என்றும் ஆண்டனி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்