மனைவி விவகாரம்: சர்ச்சை வலையில் நரேந்திர மோடி; காங்கிரஸின் அடுக்கடுக்கான கேள்விகள்!

வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (13:14 IST)
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திருமணம் ஆகாத பிரம்மச்சாரி என்று அந்தக் கட்சியினர் கூறி வந்தனர். மக்களும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தனர்.
Modi's wife Yashoda Ben
நாடாளுமன்ற தேர்தலில் மோடி முன்னிலைப்படுத்தப்பட்ட பின்பு சில மாதங்களுக்கு முன் நரேந்திர மோடிக்கு திருமணமான விஷயம் வெளியே தெரிந்தது. மனைவி பெயர் யசோதா பென் என்றும் தற்போது ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்று குஜராத்தின் உன்ஜா என்ற இடத்தில் வசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
 
சிறு வயதிலேயே மோடிக்கு திருமணம் செய்து வைத்ததால் அவர் மனைவியைப் பிரிந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக கூறப்பட்டது. யசோதா பென்னும் நரேந்திர மோடியுடனான திருமணத்தை ஒப்புக் கொண்டார். தனது வாழ் நாளில் என்றாவது ஒரு நாள் தன்னை மனைவியாக மோடி ஏற்றுக்கொள்வார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் திருமணம் பற்றியோ மனைவி பற்றியோ மோடி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார். ஏற்கனவே நடந்த தேர்தல்களில் மோடி போட்டியிடும் போது வேட்பு மனுவில் மனைவி பற்றி குறிப்பிடப்படவில்லை.
Modi
இந்த நிலையில் நேற்று முன்தினம் வதோதராவில் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்த போது அதில் திருமணமானவர் என்றும், மனைவி பெயர் யசோதா பென் என்றும் குறிப்பிட்டு இருந்தார். திருமணம் பற்றி மோடி மவுனம் கலைத்தது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நரேந்திர மோடி திருமணம் குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷோபா ஓஷா கூறியதாவது:–
 
மோடி 45 ஆண்டுகளாக தனது திருமணத்தை மறைத்து வந்துள்ளார். கணவருக்குரிய பொறுப்பை சரிவர நிறைவேற்றாத இவர் நாட்டை எப்படி பொறுப்புடன் வழி நடத்துவார். 45 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது திருமணத்தை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

தனது மனைவி யசோதா ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை என்றும், அவர் சிக்கனமான முறையில் வாழ்க்கை நடத்துவதாகவும், முதலமைச்சர் இல்லத்தில் தன்னுடன் வாழாமல் தனியாக வாழ்வதாகவும் கூறியுள்ளார். தான் நேர்மையானவர் என்றும் குடும்பம் இல்லாததால் ஊழல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து வந்தார்.
 
4 தேர்தல்களின் போதும் அவர் தனது மனைவி யசோதா பென் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் தற்போது தனது வேட்பு மனுவில் தான் திருமணமானவர் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
 
இத்தனை ஆண்டு காலம் அவர் இதை ஏன் மறைத்தார். அதற்கான கட்டாயம் என்ன? ஒருபுறம் அவர் அமித் ஷா என்ற இளம் பெண்ணை பின் தொடர்ந்து கண்காணித்தார். மற்றொரு புறம் அவர் கணவருக்குரிய பணியை ஆற்றவில்லை.
 
யசோதா பென் 46 ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தனது உரிமையை இழந்து இருக்கிறார். மோடியின் கண்களுக்கு இது தான் பெண்களுக்குரிய உரிமைகள் என தெரிகிறதா? இது குறித்து அவரது மனசாட்சி என்ன சொல்கிறது? என்று காங்கிரஸின் ஷோபா ஓஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
யசோதா பென்னுக்கு 62 வயதாகிறது. ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற பின்பு உன்ஜா என்ற இடத்தில் தனது சகோதரர் கமலேஷ் மோடியுடன் வசித்து வருகிறார். கமலேஷ் மோடி அங்கு சிறிய மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
 
ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றதால் யசோதா பென்னுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் பென்சன் கிடைக்கிறது.
 
யசோதா பென்னின் அண்ணன் கமலேஷ் மோடி கூறுகையில், யசோதா பென் பிரார்த்தனையால் மோடி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார். அவரது பிரார்த்தனை நிறைவேறிவிட்டது. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர் பிரதமராக அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம் என்றார்.
 
மோடி பிரிந்து சென்றதும் 45 ஆண்டுகளாக யசோதா பென் தனியாக வசித்து வருகிறார். அவர் ஒரு போதும் மறுமணம் செய்வது பற்றி சிந்திக்கவில்லை என்றும் கமலேஷ் மோடி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்