பொருளாதாரம்: பாஜக-விற்கு ப. சிதம்பரம் கண்டனம்

புதன், 15 ஏப்ரல் 2009 (15:41 IST)
உலக அளவில் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் நிலையிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 5 ஆண்டுகளில் தொடர் வளர்ச்சியை நிரூபித்திருப்பதாக உள்துறை அமைச்சரும், ஏற்கனவே நிதித்துறையை கவனித்தவருமான ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

ஆனால் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ப. சிதம்பரம் குறை கூறினார்.

கடுமையான போட்டியை எதிர்கொண்ட நிலையிலும், காங்கிரஸ் அரசு பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதுபோன்ற நிலையை எட்டவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடு அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் ப. சிதம்பரம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, 5.8 முதல் 8.5 விழுக்காடாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், யுபிஏ ஆட்சியில் முதல் 4 ஆண்டுகளில் 9 விழுக்காடாக வளர்ச்சி விகிதம் இருந்தது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்