பெண் பத்திரிகையாளர் கொலை:அறிக்கை கேட்கிறது தேசிய மகளிர் ஆணையம்

திங்கள், 3 மே 2010 (17:00 IST)
டெல்லியில் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரது சொந்த ஊரில் கொலை செய்யப்பட்டது குறித்து ஜார்க்கண்ட் மாநிலத்திடம் அறிக்கை கோரியுள்ளது தேசிய மகளிர் ஆணையம்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிருபமா பதக். இவர் டெல்லியில் பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணி புரிந்து வந்தார்.

இந்நிலையில் நிருபமா, அவரது சொந்த ஊரான ஜார்க்கண்ட்டுக்கு அண்மையில் சென்றிருந்தார். இந்நிலையில் கோடர்மா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து காவல்துறைக்கு மிக தாமதாமக தகவல் தெரிவித்த நிருபமா குடும்பத்தினர், மின்சாரம் தாக்கி அவர் இறந்ததாக முதலில் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி காவல்துறையினரை திசை திருப்பினார்கள்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் நிருபமா மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக தெரிய வந்ததையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குடும்ப கவுரவத்திற்காக நிருபமாவை அவரது பெற்றோர்களே கொன்றிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், இன்று நிருபமாவின் பெற்றோர்களை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அத்துடன் அக்குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலரையும், நண்பர்கள் சிலரையும் தேடி வருவதாக கோடர்மா காவல்துறை எஸ்.பி. கிராந்தி சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், நிருபமா மரணம் குறித்து முழு விவரங்களும் கொண்ட அறிக்கையை அளிக்குமாறும், எதையும் மறைக்ககூடாது என்றும் ஜார்க்கண்ட் மாநில அரசை தேசிய மகளிர் ஆணையம் கேட்டுள்ளதாக அதன் தலைவர் கிரிஜா வியாஸ் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்