பெண் சிசுக் கொலை: பஞ்சாப் முதலிடம்

செவ்வாய், 15 டிசம்பர் 2009 (19:50 IST)
புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பெண் சிசுக் கொலை குறித்த பட்டியலில் நாட்டிலேயே பஞ்சாப் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், ராஜஸ்தான் அதற்கு அடுத்தபடியாக வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் பெண் சிசுக் கொலை தொடர்பான குற்றங்கள் மொத்தம் 294 பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற பதிவேட்டு அமைப்பின் பஞ்சாப் மாநில பிரிவு வெளியிட்ட தகவல் தெரிவிப்பதாக மாநிலங்களவையில் சுகாதாரத் துறை இணையமைச்சர் தினேஷ் திரிவேதி எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 81 வழக்குகளும், ராஜஸ்தானில் 51 வழக்குகளில் பெண் சிசுக் கொலை தொடர்பாக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 21 வழக்குகளும், ஹரியானாவில் 18ம், சட்டீஸ்கரில் 24 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டுவாரியாக பதிவான வழக்குகளையும் அமைச்சர் மாநிலங்களவையில் பட்டியலிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்