பெண்களை எரிப்போருக்கு தூக்கு தண்டனை: உச்ச நீதிமன்றம்

திங்கள், 1 ஜூன் 2009 (19:05 IST)
வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்தி தீயிட்டு எரித்துக் கொல்வோரை தூக்கிலிட வேண்டும் என்றும், அதுபோன்ற குற்றம் புரிபவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால பெஞ்ச் அளித்த உத்தரவில், ஒரு பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைப்பவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும், அதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான, நாகரீகமற்ற செயலை ஒருவர் எப்படி செய்யலாம்? என்று வினவியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை ஏராளமான வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி வருவதாகவும், பல வழக்குகளில் அப்பாவிப் பெண்கள், கணவராலோ அல்லது அவரது குடும்பத்தினராலோ எரித்துக் கொல்லப்படுவதாகவும் கூறிய நீதிபதிகள், அதற்கு கடும் கண்டனம் வெளியிட்டனர்.

அதுபோன்ற படுபாதக செயல்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

மணமகள் எரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மகேந்தர் குமார் குலாதி என்பவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

எந்தவொரு நிவாரணமும் அவருக்கு அளிக்க முடியாது என்றும், மற்றொறு பெஞ்ச் முன்பு அவரது அதிர்ஷ்டத்தை நம்பி முயற்சிக்கலாம் என்றும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் எரித்துக் கொல்லப்பட்ட ரஜனி என்ற பெண் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது கணவர் மகேந்தர் குமார், அவரது அண்ணன் பிரேம் குமார், அவரது மனைவி ஆகியோர் தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், பின்னர் தீவைத்து கொளுத்தியதாகவும் கூறியிருந்தார்.

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்