பெட்ரோல் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் கிடுக்குப் பிடி!

வெள்ளி, 4 நவம்பர் 2011 (19:35 IST)
பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள உயர் நீதிமன்றம், எண்ணெய் நிறுவனங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 1.82 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை எதிர்த்து கேரளா முன்னாள் எம்.பி. கே.சி. தாமஸ், கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம்மனு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி உயர்த்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விடயத்தில் மத்திய, மாநில அரசுகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடடியாது என்றும் காட்டமாக கூறினர்.

கடந்த ஓராண்டுக்குள் பெட்ரோல் விலையை 40 விழுக்காடு அளவிற்கு உயர்த்தி, பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விலை உயர்வினால் இரண்டு சக்கர வாகன மற்றும் சிறிய கார் உரிமையாளர்கள்தான் முக்கியமாக பாதிக்கப்படுகிறார்களே தவிர, பணக்காரர்கள் அல்ல;ஏனெனில் அவர்கள் டீசல் கார் வைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டனர்.

மேலும் எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரிவதற்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவை நம்பிக்கைக்கு உரியவை அல்ல என்றும் காட்டமாக கூறிய நீதிபதிகள், விலை உயர்வு என்பது மக்கள் மெதுவாக இறப்பதற்கு சமமானது என்று சாடியதோடு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வரவு - செலவுக் கணக்கு (பேலண்ஸ் ஷீட்) விவரங்களை 3 வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.

அத்துடன் மத்திய, மாநில அரசுகளும் இது தொடர்பாக தங்களது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.

முன்னதாக இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது என்றும், எனவே அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் வாதிட்டபோது, அரசியலும் பொது நலன் சார்ந்ததே என்று கூறி இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்