பெட்ரோல் விலையை மட்டும்தானே அதிகரித்தோம்: காங்கிரஸ்

வெள்ளி, 4 நவம்பர் 2011 (17:26 IST)
மண்ணெண்ணெய், சமையல் கேஸ் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டபோதிலும், பெட்ரோல் விலையை மட்டுமே காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் ரூ. 1.82 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விலை உயர்வு குறித்து கூட்டணி கட்சி என்ற வகையில் தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும், விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறிவிடுவோம் என்றும் மம்தா இன்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வியிடம் இது குறித்து கேட்டபோது, ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது கருத்துக்களை வெளியிட உரிமை உள்ளது என்றார்.

அதே சமயம் மண்ணெண்ணெய், சமையல் கேஸ் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டபோதிலும், பெட்ரோல் விலையை மட்டுமே காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் பிரதமர் மன்மோகன் வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் இது குறித்து கூட்டணி கட்சிகளுடன் விவாதித்து தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்