பெட்ரோல் அதிரடி விலைக் குறைப்பு; சென்னையில் லிட்டருக்கு ரூ.3.87 குறைப்பு

செவ்வாய், 1 அக்டோபர் 2013 (10:11 IST)
FILE
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.87 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு 64 காசுகள் உயர்ந்தது. மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்தது.

கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் விலை நேற்று சற்று குறைந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதேபோல டீசல் விலை ஒரு மாதத்துக்கு ஒரு முறை சிறிதளவு (அதிகபட்சம் 50 காசுகள்) உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.05 குறைத்தும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இது அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகள் சேர்க்கப்படாதது. இந்த விலை மாற்றங்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தன.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 117 டாலரில் இருந்து 113 டாலராக குறைந்ததும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.66-ல் இருந்து ரூ.63 ஆக உயர்ந்ததுமே இந்த விலை மாற்றத்துக்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனாலும் டீசல் விற்பனையில் இந்த விலை உயர்வையும் சேர்த்து லிட்டருக்கு ரூ.10.52 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

4 முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வருமாறு:-

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.87 குறைந்து, லிட்டர் ரூ.79.55-ல் இருந்து ரூ.75.68 ஆனது. டெல்லியில் ரூ.3.66 குறைந்து, லிட்டர் ரூ.76.06-ல் இருந்து ரூ.72.40 ஆனது. கொல்கத்தாவில் ரூ.4.11 குறைந்து, லிட்டர் ரூ.83.62-ல் இருந்து ரூ.79.51 ஆனது. மும்பையில் ரூ.4.14 குறைந்து, லிட்டர் ரூ.83.63-ல் இருந்து ரூ.79.49 ஆனது.

டீசல் 64 காசுகள் உயர்வு

டீசல் விலையை பொறுத்தவரை சென்னையில் ஒரு லிட்டர் 64 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.55.37-ல் இருந்து ரூ.56.01 ஆனது. டெல்லியில் 57 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.51.97-ல் இருந்து ரூ.52.54 ஆனது. கொல்கத்தாவில் 57 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.56.33-ல் இருந்து ரூ.56.90 ஆனது. மும்பையில் 60 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.58.86-ல் இருந்து ரூ.59.46 ஆனது.

சிலிண்டர் விலை உயர்வு

அதேபோல மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் (14.2 கிலோ) விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.68.50 உயர்ந்துள்ளது. இதனால் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.930-ல் இருந்து ரூ.998.50 ஆனது.

டீசல் விலை உயர்வினால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்