பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடியத்தை தகர்க்கச் சதி - விசாரணையில் தகவல்

சனி, 1 செப்டம்பர் 2012 (13:21 IST)
பெங்களூரில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய 11 தீவிரவாதிகள் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரணை செய்தபோது இந்தியா, நியூசீலாந்து அணிகள் விளையாடி வரும் சின்னசாமி ஸ்டேடியத்தைத் தகர்க்கத் திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது. இதனை போலீஸார் தெரிவித்தனர்.

துபாயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இவர்களை மூளை சலவை செய்து தற்கொலை தாக்குதல்கள் மற்றும் தொடர் குண்டுவெடிப்புகள் உள்பட பல்வேறு நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காக 11 பேரில் சிலர் துபாய் சென்று ஆயுதப் பயிற்சி பெற்று வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் மிஸ்ரிகஞ்ச் என்ற பகுதியில் உள்ள குல்ஷன்-இ-இக்பால் காலனியில் ஒரு வீட்டை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த வீட்டில் இருந்த உபைதூர் ரஹ்மான் என்ற மாணவரை கைது செய்தனர்.

பெங்களூரில் கைதான 11 தீவிரவாதிகளுடன் இவன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. ஆந்திராவில் நாசவேலை செய்ய இவன் தலைமையில் 6 பேரை துபாயில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிர வாதிகள் தயார்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

பெங்களூரில் கைதான 11 தீவிரவாதிகள் பயன்படுத்திய கம்ப்யூட்டர்களை நேற்று போலீசார் சோதனையிட்டனர். அப்போது பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தற்போது இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பார்க்க ஒரு தீவிரவாதி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கைதான 11 பேரில் ஒருவர் வேறொரு நபரின் பெயரில் இந்த முன்பதிவை செய்துள்ளார். மேலும் தன்னுடன் 8 பேரை அழைத்து செல்ல அவர் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து டிக்கெட்டுக்கள் எடுத்துள்ளார்.

இதனால் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே போட்டி நடந்து வரும் சின்னசாமி ஸ்டேடியத்தில் மிகப்பெரிய நாச வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த தீவிரவாதியின் வீட்டில் கத்தை, கத்தையாக சவுதி அரேபியா நாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்