பி.டி. கத்தரி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

செவ்வாய், 9 பிப்ரவரி 2010 (15:50 IST)
பி.டி. கத்தரியை வணிக ரீதியில் பயிரிடுவதற்கு ஆதரவு தெரிவித்து மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நாளை அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் இவ்விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மத்திய செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மான்சான்டோ உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரியை பயிரிடுவதற்கு ஆதரவான அறிவிப்பை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட நினைக்கிறார்.

பி.டி.கத்தரிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு உள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் பி.டி.கத்தரி தொடர்பாக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்தரங்குகளில் கூட எதிர்ப்பு நிலை காரணமாக கூச்சல், குழப்பம் காணப்பட்டது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் பி.டி.கத்தரிக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளக் கூட அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்வரவில்லை.

பி.டி. கத்தரியின் பயன்களை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள போதிலும், அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பி.டி. கத்தரிக்கு ஆதரவு தெரிவிப்பதில் மிகுந்த ஊக்கத்துடன் காணப்படுகிறார். அதுமட்டுமின்றி இன்னும் ஓரிரு நாளில் பி.டி.கத்தரி குறித்து இறுதி முடிவை அறிவிப்பேன் என்றும் மிரட்டல் விடுக்கிறார்.

எனவே, பி.டி. கத்திரி பயரிடுவது தொடர்பான விவகாரத்தில் தாமதமின்றி பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, பி.டி.கத்தரிக்கு ஆதரவாக அமைச்சர் ஜெய்ராம் அவசரக் கருத்து எதையும் வெளியிடுவதை தடுக்க வேண்டும” எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்