பாகிஸ்தான் யுரேனியம் விற்பனை இல்லை: ஆஸ்ட்ரேலியா

வியாழன், 8 டிசம்பர் 2011 (19:46 IST)
இந்தியாவிற்கு யுரேனியம் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ள ஆஸ்ட்ரேலியா, அதே அடிப்படையில் தங்களுக்கும் யுரேனியம் விற்பனை செய்ய வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

டெல்லி வந்துள்ள ஆஸ்ட்ரேலியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதற்கான சூழல் தனித்துவம் வாய்ந்தது என்று ஆஸ்ட்ரேலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“இரு நாடுகளையும் ஒப்பிடுகையில், அணு ஆயுத பரவலில் இந்தியாவிற்கு தூய்மையான வரலாறு இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் வரலாற்றை பார்த்தால் அதில் கவலைப்படும் அளிவிற்கு பிரச்சனைகள் உள்ளது” என்று ஸ்மித் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தனது அணு உலைகளை பன்னாட்டு அணு சக்தி முகமையின் பார்வையின் கீழ் பாகிஸ்தான் கொண்டு வரவில்லை. மேலும், பன்னாட்டு அணுக் கருவிகள் விற்பனைக் குழுவிடமும் அது அனுமதி பெறவில்லை என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.

அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு யுரேனியம் விற்க முன்வந்திருப்பதுபோல், பாகிஸ்தானிற்கும் யுரேனியம் விற்க ஆஸ்ட்ரேலியா முன்வர வேண்டும் என்று அந்நாட்டிற்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் மாலிக் அப்துல்லா கூறியிருந்ததற்கு ஸ்மித் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்