பாகிஸ்தானை விட சீனாவால் ஆபத்து அதிகம்: இந்திய விமானப்படை தளபதி

ஞாயிறு, 24 மே 2009 (12:38 IST)
அணு ஆயுத வல்லமை படைத்த நாடு பாகிஸ்தான் என்றாலும், இந்திய எல்லையில் படைகளையும், ஆயுதங்களையும் குவிப்பதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக சீனா உருவெடுத்து வருவதாக இந்திய விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விமானப்படை தளபதி மார்ஷல் பாலி ஹோமி மேஜர் கூறுகையில்,
எல்லைப்பகுதியில் பெருமளவில் ராணுவத்தை குவித்து வருவதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக சீனா உருவெடுத்து வருகிறது.

சீனாவின் போர்த்திறமை பற்றி இந்தியா குறைவாகவே அறிந்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் எந்தளவு திறமையானவர்கள் என்பது பற்றியும் நம்மிடம் உறுதியான தகவல்கள் இல்லை.

நமது ராணுவத்தில் உள்ள ஆயுதங்கள் சீனாவை விட திறன் குறைந்ததாகவே உள்ளது. எனவே புதிதாக பதவியேற்கும் இந்திய அரசு, சீன ராணுவத்தை விட அதிகமான அதிநவீன ஆயுதங்களை நமது ராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீன விமானப்படையில் கடந்த 1960ஆம் ஆண்டில் இருந்தே ஜே-6, ஜே-7 ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை மிக்-19, மிக்-21 ரக விமானங்களுக்கு சமமான திறன் கொண்டவை. மக்கள் விடுதலை ராணுவப் பிரிவின் விமானப் படையில் உள்ள சுக்காய்-30, ஜெ.எப்-17, ஜெ-10 போன்ற சக்தி வாய்ந்த விமானங்களும் சீனாவிடம் உள்ளது.

எனவே, சீனாவின் விமானப்படைக்கு இணையான வல்லமை கொண்ட அதிநவீன போர் விமானங்கள், நமது விமானப்படைக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்