பன்றிக்காய்ச்சல்: பள்ளிக்கூடங்களுக்கு புதிய உத்தரவு

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (11:31 IST)
புதுடெல்லி: நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தியாவில் இந்நோயினால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பள்ளிக்குழந்தைகள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க, பிரார்த்தனைக் கூட்டங்களை பள்ளி நிர்வாகம் நடத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முதலில் பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக, மாணவ-மாணவிகளின் பிரார்த்தனைக் கூட்டத்தை கூட்டுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கண்டறிவதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி உரிய சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இத்தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்