நாடாளுமன்ற முடக்கம்: பிரதமர் கவலை

ஞாயிறு, 12 டிசம்பர் 2010 (10:34 IST)
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அயல்நாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங், நேற்று பெல்ஜியத்திலிருந்து ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு விமானத்தில் சென்றார்.

அப்போது விமானத்தில் வைத்து அவரிடம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தால் இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மன்மோகன் கூறியதாவது:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் என்ன செய்ய முடியுமோ, அதே அடிப்படையில்தான் இப்போது நடைமுறையில் உள்ள குழுக்களும் விசாரணை நடத்தி வருகின்றன. இதில் எந்த வேறுபாடும் இல்லை.

அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி விட்டோம். ஆனால், அவர்கள் நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் தொடர்ந்து முடக்கி வருகின்றனர்.

உள்நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டிய நேரத்தில், பிரதமர் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாற்றுவது பற்றி கேட்கப்படுகிறது.

இந்த பயணத் திட்டங்கள் அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டவை. வெளிநாடுகளுக்கு இந்தியா அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்