நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்டம்: மோடி - ராகுல் ஆவேச பேச்சு

செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (10:35 IST)
நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாக குற்றஞ்சாற்றி வருகின்றனர்.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார்? என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கட்சியின் முன்னணி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
 
நாடாளுமன்ற தேர்தல்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் ஒருவரையொருவர் தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
 
தனது மாநிலமான குஜராத்தில் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி, ராகுல் காந்தியை தாக்கியும், பஞ்சாப் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, மோடியை தாக்கியும் பேசினர்.
 
நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கெராலு நகரில் பதான் நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:-

நீங்கள் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைக்கிறீர்களா, அப்படியென்றால் ராகுல் காந்தியின் பேச்சுகளை கேளுங்கள். அவரது கணக்குப்படி, குஜராத்தில் 27 ஆயிரம் கோடி வேலைகள் காலியாக இருக்கிறது. குஜராத்தின் மொத்த ஜனத்தொகையே 6 கோடியாக இருக்கும்போது, இது எப்படி சாத்தியமாகும்? எந்த மாதிரியான சான்றை காங்கிரஸ் கொண்டு வந்திருக்கிறது.
 
குஜராத் மாநிலத்தில் லோக் அயுக்தா இருக்கிறது. அதன் முதல் வழக்கு இப்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்கிற பொது அறிவு அந்த அளவுக்கு இல்லை.
 
நான் உண்மையிலேயே டீ விற்றேனா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க, காங்கிரஸ் குறைந்தபட்சம் 100 பேரை எனது சொந்த ஊரான வத்நகருக்கு அனுப்பியிருக்கிறது. அவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், என் தந்தை வயதில் உள்ள சேகர்சிங் வஹேலா அந்த நாட்களில் எனது இடத்துக்கு வருவார். அவர் என்னிடம் அவருக்காக டீ போட்டுத்தரும்படி கூறுவார்.
 
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
 
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-
 
மோடியின் பேச்சையும் கவனியுங்கள், எனது பேச்சையும் கவனியுங்கள். காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு அன்பும், மரியாதையும் நிறைந்தது. நாங்கள் எதிர்க்கட்சியினர் பற்றி பேசும்போதும் அன்பு, மரியாதையுடன் தான் பேசுகிறோம். கடுமையான சொற்களை கோபமான குரலில் பேசுவதில்லை.
 
ஆனால் அவர்கள் எப்படி யாருக்கும் நல்லது செய்ததில்லையோ, அதுபோல எந்த நல்லதையும் பேசுவதில்லை, குஜராத் மக்கள் தான் அந்த மாநிலத்தை உருவாக்கினார்கள். குஜராத் பெண்களால் தான் அமுல் நிறுவன பொருட்களை பிரபலமானது. ஆனால் நீங்கள் 60 வருடங்களாக ஒன்றும் செய்யவில்லை.
 
ஆனால் இப்போது மோடி வந்து, நான் தான் குஜராத்தை உருவாக்கினேன் என்று தற்பெருமை பேசுகிறார். அதேபோல நாட்டையும் உருவாக்குவேன் என்கிறார். எல்லா பொது அறிவும் இருக்கிறதா? என்று யாரையும் கேட்கும் உரிமை மோடிக்கு இல்லை.
 
மோடி சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களுக்குதான் சாதகமாக செயல்படுகிறார். அதானி குழும நிறுவனங்களுக்கு 45 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்டர் ஒரு ரூபாய் விலையில் வழங்கியிருக்கிறார். ரூ.26 ஆயிரம் கோடி ஆதாயம் அளிக் கக்கூடிய அளவுக்கு மின்சாரத்தை விட்டுக் கொடுத்தார். இவைகளின் மூலம் அதானிக்கு கிடைத்த மொத்த பலன் ரூ.35 ஆயிரம் கோடி.
 
ஒரு நானோ கார் கம்பெனிக்காக டாடா நிறுவனத்துக்கு 0.1 சதவீத வட்டியில் ரூ.10 ஆயிரம் கோடி 25 வருட கடனாக மோடி வழங்கியிருக்கிறார். ஆனால் அவர் பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கு ஒதுக்கியது வெறும் ரூ.8 ஆயிரம் கோடி தான். அதேசமயம் விவசாயிகளின் கடனுக்கு 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
 
கர்நாடகா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடந்த ஊழல்கள் அவர் கண்களுக்கு தெரியவில்லை. இந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் அன்புடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் நாட்டை பிளவுபடுத்துவதை பற்றி பேசுகிறார்கள்.
 
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்