தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த்

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (16:26 IST)
தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் பேருந்துகளையும் சேதப்படுத்தினர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், மாணவர்களும் கூட்டாகச் சேர்ந்து டி.ஆர்.எஸ் தலைவர் கே. சந்திரசேகர ராவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமே தொடர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முதல்வர் கே. ரோசையாவின் உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்தனர்.

பல இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இதனால் கடலோர ஆந்திர மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

பேருந்து ஒன்றுக்கும் கலவரக்காரர்கள் தீவைத்தனர். பந்த் காரணமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்