தமிழ் திரைப்படம், தொலைக்காட்சிகளுக்கு புதன் முதல் தடை : கர்நாடக ரக்‍ஷனா வேதிகா!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (19:48 IST)
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் அளிக்க வகை செய்யும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்துவரும் கர்நாடக ரக்‍ஷனா வேதிகா அமைப்பு, புதன்கிழமை முதல் தமிழ் திரைப்படங்களும் திரையிடக்கூடாது என்றும், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்க‌ளூருவில் இன்று கூடிய கர்நாடக ரக்‍ஷனா வேதிகா அமைப்பினர், தமிழ் நாட்டிற்கு கடுமையான செய்தியை தெரிவித்திடவே இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இவ்வமைப்பின் தலைவர் நாராயண கெளடா இதனை அறிவித்துள்ளார்.

புதன்கிழமை முதல் தமிழ் திரைப்படங்களை திரையிடக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தமிழ் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று கேபிள் தொலைக்காட்சி இயக்க நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, இரயில், சாலை போக்குவரத்தையும் நிறுத்தி போராடப் போவதாகவும், ஏப்ரல் 11, 12 தேதிகளில் ஓகேனக்கல் சென்று அங்கு போராட்டம் நடத்தப் போவதாகவும் இவ்வமைப்பு முடிவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்